நியூசி. துப்பாக்கிச்சூடு: கொலையாளி யார்?

கிறைஸ்ட்சர்ச் : நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்று கிறைஸ்ட்சர்ச். இங்குள்ள, அல் – நுார் என்ற மசூதியில், நேற்று, ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கறுப்பு உடை மற்றும் தலையில், ‘ஹெல்மெட்’ அணிந்த மர்ம நபர் ஒருவன், மசூதிக்குள் நுழைந்தான். அவன் கைகளில் இருந்த அதிநவீன இயந்திர துப்பாக்கியால், கண்ணில் பட்டவர்களை எல்லாம், சரமாரியாக சுட்டான். இதில் 49 பேர் பலியாகினர்.

வெறியாட்டம் :

போலீஸ் விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர், 74 பக்க அறிக்கை ஒன்றை எழுதி உள்ளான். அதில், தனது பெயர் பிரின்டன் ஹாரிசன் டாரன்ட்28 எனவும், ஆஸ்திரேலிய குடிமகன் என்றும், இந்த தாக்குதலை நடத்தவே நியூசிலாந்து வந்ததாகவும், தான் எந்த பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவன் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளான்.

கைது செய்யப்பட்ட அவன் கிறிஸ்ட் சர்ச் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். ஜாமின் கோரிய அவனது கோரிக்கையை மறுத்த நீதிபதி ஏப்ரல் 5-ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

வைரலாக பரவியது :

இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்திய பிரின்டன் ஹாரிசன் டாரன்ட் தலையில், ‘ஹெல்மெட்’ அணிந்திருந்தான். அதில், ‘கேமரா’ பொருத்தி, அதன் வாயிலாக, ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரடி ஒளிபரப்பு செய்தான். இது வைரலாக பரவி பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைத்தது. இதனால் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வீடியோக்களை அகற்றும்படி பேஸ்புக் நிறுவனத்தை நியூசி., போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *