அமித்ஷா தமிழக வருகை, தாமரை மலருமா? – ஆர்.கே.

2019 ல் தாமரை மலரும் தாமரை மலரும் என்று 2014 ல் இருந்தே உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் பாஜகவினர். 2019 ம்  கிட்டத்தட்ட  வரப்போகிறது.  2019ல் தாமரை மலருமா? மலராதா என்று பட்டி மன்றம் நடத்தாத குறைதான், இப்போது மீடியாக்களின் பஞ்சயாத்துகளில் நடந்து கொண்டிருக்கிறது.

தாமரை என்னவோ தினந்தோறும் மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  பாஜக  தாமரை சின்னம் மலர வேண்டும் என்றால், முதலில் மக்கள் மனதில் அது மலர வேண்டும். பிறகுதான் அது ஆட்சிக் கட்டிலில் மலரும் என்பது அனைவரும் அறிந்ததே.

மக்களின் மனதில் மலர மாநில பாஜக  என்ன  செய்துள்ளது என்று பட்டியலிடச் சொன்னால்,  அவர்களால் முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அமித்ஷா நேற்று நிறையவே பட்டியலிட்டுள்ளார், அவர்கள் கட்சி சார்பாக நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில்.

உண்மையில் கட்சி தன் சாதனை பட்டியலை சொல்லி மக்கள் மனதில் இடம் பிடிப்பதைக் காட்டிலும்,  ரஜினி,  கமல் மற்றும்  ஏதோ  ஒரு  கூட்டணி கட்சியின் தோளில் ஏறி மலரச் செய்ய முடியுமா? என்று பார்க்கிறது.  அதற்கு எடுக்கும் முயற்சியில் இன்னும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்றபடவில்லை.

சரி தனது கட்டமை பலப்படுத்தினால் தான், தன்னை தமிழகத்தில் இதர பிற கட்சிகள் மதிப்பார்கள் என்று கருதி, தீவிர முயற்சிக்குப்  பின் 16000 பூத் கமிட்டி தமிழகமெங்கும் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  5 பூத் கமிட்டிக்கு ஒரு ஆள் என்ற வகையில் தமிழகத்தில் அமைக்க வேண்டிய 60,000 பூத் கமிட்டிக்கு ஆள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஈஞ்சம்பாக்கத்தில் பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் என்னவோ சிறப்பாகத்தான் இருந்தது. வந்தவர்கள் பூத் கமிட்டி மெம்பரா அல்லது காசு கொடுத்து கூட்டி கூட்டமா என்று புரியாத புதிராக  குழம்பிய எதிர்கட்சிகளுக்கு, அமித்ஷா சவால் விட்டுள்ளார்.  பாஜகவை எதிர்க்கும்  எதிர்கட்சிகள் 2019 க்குள்  பாஜகவின் வியூகத்தைக் கண்டு மிரண்டு போவார்கள் என்று வேறு மிரட்டியுள்ளார்.

போகிறபோக்கில் ஆளும் அதிமுக  ஆட்சியை  ஊழல் மலிந்த ஆட்சி என்று சாடியுள்ளார்.  நோட்டுக்கு  ஓட்டு  என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள கட்சிகளை பாஜக ஒழித்துக் கட்டும்,  21 மாநிலங்களில் செய்த சாதனைகளை தமிழகத்திலும் நடத்திக் காட்டுவோம் என்று சூளுறை செய்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் 5,10,000 கோடி ரூபாய்  தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இக்காலகட்டத்திற்குள் கடந்த 70 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் எவராவது தமிழகத்தின் நலனுக்கு ஒதுக்கிதுண்டா? அவர்கள் கணக்கு காட்ட வேண்டும். நாங்கள் ஒதுக்கிய விவரங்களை சொல்லுகிறோம் என்று பட்டியலிட்டார்.

அவர் பட்டியலிட்டதை பார்க்கும் போது,  தமிழகம் சொர்க்க பூமியாக மாறி இருக்க வேண்டும். அப்படி தெரியவில்லையே என்று கேட்காதீர்கள்.  அதை  ஆளும் வர்ககத்தினரிடம் கேட்டால் 17,000 கோடி மட்டுமே மத்திய தொகுப்பில் இருந்து மாநில அரசுக்கு வந்துள்ளது.  மீதி பாக்கிக்கு காவடி துக்கி வருகிறோம்.  இந்தா வரும், அந்தா வரும் என்று பூச்சி காட்டுகிறார்கள்  மத்திய ஆளும் கட்சியினர் என்று அதிமுக குற்றம் சாட்டுகிறது.

ஆக தாமரை மலருமா? மலராதா? என்றால் அது அமித்ஷா செய்யப்போகும் மேஜிக்கில் இருக்கிறது என்று பாஜகவினர் சொல்கின்றனர்.  என்ன  மேஜிக்?  இவிஎம் மெஷினா? என்று கேட்காதீர்கள்  இல்லை  எதிர்கட்சிகளை  உடைக்கும் சூழ்ச்சியா? என்று கேட்காதீர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும்.

சரி இத்தனை அசுர பலத்துடன் இருக்கும் பாஜக என்ற யானை மக்கள் என்ற அங்குசத்திற்கு பயந்துதான் ஆக வேண்டும். அந்த  அங்குசத்தை எதிர்கட்சிகள் சரியாக பயன்படுத்தி பலம் பொருந்திய பாஜகவை பணிய வைக்குமா? அல்லது மிரண்டு போய் ஓட்டம் எடுக்கமா என்று தெரியவில்லை.

இன்னும் எதிர்கட்சிகளிடம் எந்த சப்தத்தையும் காணோம். இப்படிபோனால்.  அமித்ஷா  செய்யும்   ஜாலத்தில்  தமிழ்நாடு மயங்கினாலும் மயங்கிவிடும் என்றே தோன்றுகிறது. அதற்கான யுக்திகள் மிக தீவிரமாக தீட்டப்படுகின்றன. அதை முறியடிக்கும்  யுக்திகளை  எதிர்கட்சிகள்  ஒன்றிணைந்து காட்ட வேண்டும்.  இல்லையென்றால்  தமிழத்தில் தாமரை மலருமோ இல்லையோ வளரும் என்பது நிச்சியம்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *