[:en]என்று தணியும் எங்கள் காவிரி தாகம்? –  ஆர்.கே.[:]

[:en]

தமிழ்நாடு முழுவதும் காவிரிக்கான கொந்தளிப்பு. நடந்தால் வாழி காவேரி என்று பாடப்பட்டது. இப்போது காவிரி வந்தால் போதாதா என்ற நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் காரணங்கள் மட்டுமே முழு முதற்காரணமாக உள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும், காலம் தாழ்த்தும் மத்திய அரசை வழிக் கொண்டு வரும் வழி முறையற்ற தமிழக அரசு. ஆளுமையற்ற தமிழக அரசின் அணுகுமுறை மத்திய அரசின் பாரா முகத்திற்கு ஏதுவாக உள்ளது.

காவிரி பிரச்னையை ஆளுபவர்கள் முடிவுக்கு கொண்டு வரமாட்டார்கள் என்பதை அறிந்த தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  அதிகரிக்கும் அழுத்தங்கள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தெரியாததாக உள்ளது. உச்ச நீதிமன்றம் தனது கடமையை முடித்துவிட்ட பின், வேண்டாத கால தாமதத்தை, கர்நாடகவில் நடக்கும் தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படுவதை தடுக்கும் திராணியற்ற  அரசாக  ஆளும் மாநில அதிமுக அரசு உள்ளது.

மத்திய அரசின் கைப்பாவையாக உள்ள, இந்த மைனாரிட்டி அதிமுக அரசு, எங்கே தனது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாய் மூடி மௌனம் காப்பது போல,  அதன்  நடவடிக்கைகள்  தமிழர் விரோத நடவடிக்கையாக உள்ளது.

ஒரு ஆளும் அரசு காட்ட வேண்டிய காட்டத்தை இந்த அரசு செய்யாது இருப்பதில் இருந்து இதை நாம் புரிந்து கொள்ள முடியும்.  தமிழ்நாடு காவேரி விசயத்தில் ஒரு முடிவை எட்டும் வரை  ஐபிஎல் கிரிக்கெட் வேண்டாம் என்று அனைவரும் சொல்லும் போது, அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க திராணியற்றி சப்பை கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது.

அனாமத்தாக ஆட்சிக்கு வந்தவர்கள்,  அதிகார வர்க்கத்தை எப்படி பகைத்துக் கொள்வார்கள். ஆகையால் எந்த நடவடிக்கையும் இல்லை. மத்திய அரசு நம் ஆட்சியாளர்களைக் கொண்டே,  நமக்கு எதிராக நடவடிக்கைகளை செய்வதில் இருந்து இதை புரிந்து கொள்ள முடியும்.

கர்நாடகத்தோடு நல்ல உறவு இல்லாத நிலையில், அண்ணா பல்கலைகழகத்திற்கு கர்நாடகவைச் சேர்ந்த துணை வேந்தரை ஆளுநர்  நியமிக்கிறார்.  அதை எதிர்த்து ஆளும் தரப்பு பேச முடியவில்லை என்றால். இங்கே ஆளுவது அதிமுக அரசா, இல்லை மத்திய பாஜகா என்பதை எல்லோரும் அறிந்தே இருக்கிறார்கள்.

ஆக  மே 3 ம்  தேதி  மத்திய அரசை மீண்டும் ஒரு வரைவு திட்டத்தை கொண்டு வரச் சொல்லி இருக்கிறது  உச்ச நீதிமன்றம். இது எதற்கு? காவிரி மேலாண்மை வாரியம் அமையுங்கள் என்று சொல்லாமல். நாங்கள் சொல்லிய தீர்ப்பில் அதுவும் அடங்கும் என்பது எதைச் சொல்வதாக இருக்கிறது.  காலங்கடத்த  மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உதவி செய்கிறதோ என்று  எண்ணத் தோன்றுகிறது.

தீர்ப்பின் படி நடக்காத மத்திய அரசுக்கு எதிராக,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக அரசால் போடப்பட்டது. அதற்கு உரிய தண்டனையை,  மேல் நடவடிக்கையை எடுக்காது, வேண்டாத வேலைகளை செய்வது எந்த வகையில் நியாயம். ஆக உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளும் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இதை அதில் அங்கம் வகிக்கும் மூத்த நீதிபதி செல்லமேஸ்வரரே  பிடிஐ செய்தி நிருவனத்திற்கு,  தான் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டதன் மூலம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பல குற்றச்சாட்டுகள் உள்ள பின்னணியில், அவரே மத்திய அரசின் தயவை நாடி நிற்கும் நிலையில் உள்ளார். அத்தகைய நிலையில் இவ்வழக்கு அவரின் தலைமையின் கீழ் உள்ள பென்ஞ்சில் விசாரிக்கப்படும் போது,  தமிழ்நாட்டிற்கு  என்ன நியாயம் கிடைத்துவிடும் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.

ஆக என்று தணியும் இந்த காவிரி தாகம் என்ற கேள்வியோடுதான் நாம் முடிக்க வேண்டியுள்ளது.  சட்டத்தின் ஆட்சி இங்கு நடைபெறுகிறதா? என்ற ஐயப்பாடும் நிலைவுகிறது.  இப்போக்கு இப்படியே நீடிக்கும் என்றால், இது இரு மாநில உறவுகளை கடுமையாக பாதிக்கும் என்பதில் ஐயம் இல்லை.  தென்மாநிலங்களுக்குள் ஒரு ஒற்றுமையை குலைக்கும் சதியாகவும் இதை பார்க்க வேண்டியுள்ளது.  இதற்கு  சான்றாக  தென்மாநிலங்கள் நலன்கள் புறக்கணிக்கப்படுவதாக சொல்லி,  தென்மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கேரளாவில் ஒன்று கூடி விவாதித்திருப்பதில் இருந்து நாம் இதை அறிந்து கொள்ள முடிகிறது.  மத்திய  அரசு  இப்போக்கை  மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் மக்களால் மாற்றப்படும்.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *