[:en]காலம், உங்களை சுற்றி சுழலட்டும்.[:]

[:en]

எல்லா காலங்களும் முழுவாழ்நாள் காலங்களே.
இலையுதிர் காலம் மட்டுமே, திராட்சை கனிகளுக்கான பருவம் என்று எப்படி சொல்கிறீர்கள்? மழை காலத்திலும் அவை தோன்றுகின்றன. அவற்றிற்குள் சாறு துடிக்கின்றது. திராட்சை ரசத்தை அது கனவுகாண்கிறது.

ஒவ்வொரு பருவ காலமும், மற்ற மூன்று பருவ காலங்களை தனக்குள் சுமந்தே திரிகிறது. கால இடங்களின் ஒவ்வொரு புள்ளியிலும் அவவை ஒன்றாகவே ஒடுங்கியுள்ளன.
காலம் ஒரு மாபெரும் செப்பிடுவித்தைகாரன்! மனிதர் மாபெரும் போலிகள்.

காலத்தில் நின்று, புறப்படுவது என்பதே இல்லை. தங்கியிருந்து, உண்டு, இளைப்பாறி போகும் இண்டங்களும் காலத்தில் இல்லை. ஒன்றின் மேல் ஒன்றாக படிந்து, போய் கொண்டே இருப்பதுதான் காலம்.அதில் முடிவில்லை. விலக்குவதற்கு எதுவும் இல்லை. ஆரம்பமும் இல்லை. முடிவும் இல்லை.

ஈரமான கல்லை நக்கும் பூனை, கசியும் தனது ரத்தத்தையே சுவைக்கிறது. கல்லில் கசியும் ரத்தம் என்றே அது அதை நினைக்கிறது.

காலத்தின் வெளிவிளிம்பில் கசியும் தனது ரத்தத்தையே மனிதன் சுவைக்கிறான். காலத்தின் ஆரக்கால்களில் உள்ள தனது சதையையே அவன் மேல்லுகிறான். அந்த ரத்தமும் சதையும், காலத்திற்கு சொந்தமானது என்றே அவன் நினைத்துவிடுகிறான்.

புலன் உணர்வுகளால் உருவாக்கப்பட்ட சக்கரம்தான் காலம்.
வெட்டவெளி சூனியத்தில் அதை சுழல விட்டதும் புலன் உணர்வுகளே.

திகைபூட்டும் பருவகாலங்களை நீங்கள் உணர்கிறீகள். அதனால் எல்லாமே அவற்றின் பிடியில் சிக்கி இருப்பதாக நம்புகிறீர்கள்.

வளர்ச்சியும் சிதைவும் மட்டும் உங்கள் புலனுணர்விற்கு புலப்படுகின்றன. அதனால் அழிவு என்பது வளர்ச்சியின் முடிவு என்று முடிவு கட்டிவிடுகிறீர்கள். வளர்ச்சிக்கும் அழிவுக்குமான ஆற்றல், வளர்ச்சியோ அழிவோ அல்ல என்பதை ஒப்புகொள்ளுங்கள்.

தென்றலோடு ஒப்பிட்டு, வீசும் காற்று வேகமானது என்று உணர்கிறீர்கள். காற்று விரைவில் வெகுதூரம் போய்விடும் என்கிறீர்கள். காற்றையும் தென்றலையும் செலுத்தும் சக்தி ஒன்றுதான். அந்த சக்தி, காற்றுடன் ஓடுவதும் இல்லை, தென்றலில் தடுமாறுவதும் இல்லை.

எவ்வளவு ஏமாளிகள் நீங்கள் உங்கள் புலனுணர்வுகள் எவ்வளவு தந்திரம் செய்கின்றன. உங்களை திகைபூட்டும் எல்லா மாற்றங்களும் செப்பிடுவித்தைகளே.

நிதானம் வேகத்தின் தாய், வேகத்தை சுமந்து செல்வது நிதானம். கால இடங்களின் ஒவ்வொரு புள்ளியிலும், வேகமும் நிதானமும் பிரிக்க முடியாதபடி அமைந்துள்ளன.
அழிவிலிருந்து அல்லாமல் வேறொன்றிலிருந்து ஏதாவது முளைத்ததுண்டா? வளர்வது தவிர வேறேதாவது அழிவதுடுண்டா?

நீங்கள் தொடர்ந்து அழிந்து கொண்டுதானே வளர்ந்து வருகிறீர்கள்? தொடர்ந்து சிதைவதன் மூலம், நீங்கள் வளர்ந்து கொண்டே வரவில்லையா? இறந்து போனவர்கள், உயிர் வாழ்பவர்களின் அடிமண் தானே? உயிர்வாழ்பவர்கள் இறந்து போனவர்களின் தானிய களஞ்சியம் தானே?

சக்கரத்தில் உள்ள அணில் போல மனிதன் கால சக்கரத்தை சுழற்றி விடுகிறான். அவனே நம்பமுடியாத அளவுக்கு அது சுழல ஆரம்பித்து விடுகிறது. அவனும் அதில் அகப்பட்டு விடுகிறான். காலத்தின் சுழற்சி வேகத்தை அவனால் கணிக்கவும் முடிவதில்லை.

பிரபஞ்ச வெட்டவெளி இருளில் கால சக்கரம் சுழல்கிறது.
புலன் உணர்வுகளால் அறியப்படும் எல்லா பொருள்களும் கால சக்கரத்தின் ஆரக்கால்களில் உள்ளன. ஆனால், காலவெளி தவிர வேறெதையும் அவற்றால் அறிய முடிவதில்லை. அதனால் பொருள்கள் தொடர்ந்து தோன்றுவதும் மறைவதுமாக உள்ளன.

வாழ்வு, சாவு ஆகியவற்றின் பாதை ஒன்றுதான், காலச்சக்கரத்தின் வெளிவட்ட விளிம்பில். வட்டத்தின் சுழற்சியில் அது ஒரு முடிவிடத்தை அடைவதே இல்லை. அது எங்கும் தங்கி நிற்பதும் இல்லை. உலகில் உள்ள எல்லா இயக்கங்களும் சுழல் வட்ட இயக்கங்களே.

கால சக்கரம் சுழல்கிறது. ஆனால் அதன் அச்சுதண்டு என்றும் ஓய்வில் இருக்கிறது. காலச்சக்கரத்தின் அச்சுதண்டுதான் கடவுள். அதில் தான் எல்லாம் அமைதியாக இருக்கின்றன. வெளிவிளிம்பில் எல்லாம் குழப்பம் தான்.
வெளிவிளிம்பிளிருந்து அச்சை நோக்கி நழுவுங்கள். சுழற்சியின் தலை சுற்றலிலிருந்து விடுபடுங்கள்.
காலம், உங்களை சுற்றி சுழலட்டும்.

அப்போது, நீங்கள் காலத்தோடு சேர்ந்து சுழல மாட்டீர்கள்.[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *